ஜனவரி 25 – மொழிப்போர் தியாகிகள் தினம்!

ஜனவரி 25 – மொழிப்போர் தியாகிகள் தினம்!

https://www.facebook.com/photo.php?fbid=606504296072212&set=a.138126339576679&type=3
இந்தித் திணிப்புக்கு எதிராக நடந்த போராட்டங்களை மொழிப்போர் என்கிறோம். அந்த மொழிப்போரைப் பற்றி கடந்த காலங்களில் பல பதிவுகள் வந்துள்ளன. அவற்றில் மூன்று பதிவுகள் முக்கியமானவை:

1. தமிழன் தொடுத்த போர் – மா. இளஞ்செழியன்.
2. என்று முடியும் இந்த மொழிப்போர்? – அ. இராமசாமி
3. இந்தி ஏகாதிபத்தியம் – ஆலடி அருணா

மேலே இருக்கும் மூன்று முக்கியமான புத்தகங்களிலும் மொழிப்போர் தியாகிகள் வரிசையில் நடராசனின் பெயரைத்தான் முதலில் குறிப்பிடுகிறார்கள். அதன்பிறகே தாளமுத்துவின் பெயரைக் குறிப்பிடுகிறார்கள். காரணம், நடராசன்தான் முதலில் உயிர்நீத்தவர். ஆகவே, அவரைத்தான் முதல் தியாகி என்கிறார்கள்.

ஜனவரி 25 - மொழிப்போர் தியாகிகள் தினம்!

ஜனவரி 25 – மொழிப்போர் தியாகிகள் தினம்!

”நடராசன் முதலில் பிணமானார், அடுத்த பலி தாளமுத்து. அவர் ஆதி திராவிட மரபு. இவர் நாடார் சமுதாயம்” என்கிறார் இளஞ்செழியன்.

“இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முதல் பலியான நடராசன் ஆதி திராவிட சமுதாயத்தைச் சேர்ந்தவராவார்.” என்கிறார் அ. இராமசாமி.

“இந்தி எதிர்ப்புப் போரில் முதன்முதலில் உயிர் நீத்த உத்தமத் தியாகி திரு. நடராசனாவார். அவரை அடுத்து உயிர் நீத்த மாவீரன் தாளமுத்து ஆவார்” என்கிறார் ஆலடி அருணா.

மேலும், ”என்னைப் பொறுத்தவரை தோழர்கள் நடராசன், தாலமுத்து மரணத்தை என்னுடைய அண்ணன், தம்பி மரணம் என்றே கருதுகின்றேன்” என்று பேசியிருக்கிறார் அண்ணா.

நாவலர் நெடுஞ்செழியன் எழுதிய ”திராவிட இயக்க வரலாறு” புத்தகத்தில், “திரு. நடராசன் என்ற வீர இளைஞர் சிறைக்கொடுமையின் காரணமாக 1939 ஜனவரி 15 அன்று உயிர் நீத்தார். அவரையடுத்து திரு. தாளமுத்து என்ற இளைஞரும் சிறைக்கொடுமை தாங்காது 1939 மார்ச் 13ஆம் நாளன்று சிறைச்சாலையிலேயே இயற்கை எய்தினார்” என்று பதிவுசெய்திருக்கிறார்.

திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு எழுதிய ”நீதிக்கட்சி வரலாறு” புத்தகத்தில், ”இந்தி எதிர்ப்புப் போரில் முதல் முதலாக உயிர்நீத்தவர் நடராசன், இவரை அடுத்து தாலமுத்து உயிர் நீத்தார்” என்றே பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசியத்தை முன்னெடுக்கும் பழ. நெடுமாறன், தன்னுடைய “உருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்து பாசிசமும்” புத்தகத்தில் “மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடராசனும், அதன்பின்னர் தாளமுத்துவும் முதல் களப்பலியாயினர்” என்று பதிவுசெய்திருக்கிறார்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் எழுதியுள்ள புத்தகம் ஒன்றில், “தமிழுக்காய் உயிர்தந்த முதல் தமிழன், ஒரு தலித் தோழன் என்பது குறிக்கத்தக்கது” என்று பதிவுசெய்திருக்கிறார்.

ஆக, மொழிப்போர் பற்றிய பதிவுகளில் நடராசனுக்கு உரிய முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அவர் தலித் என்பதால் அவர் புறக்கணிக்கப்படவோ, ஒதுக்கப்படவோ இல்லை. வரலாற்றுப் பதிவுகளில் இருந்து அவர் மறைக்கப்படவும் இல்லை, பின்னுக்குத் தள்ளப்படவும் இல்லை. நடராசனின் மரணத்தை யாரும் நினைவுகூராமலும் இருப்பதில்லை. ஆக, ’நடராசனின் பெயரை முதலில் சொல்வதற்கு மனமற்ற தமிழர்கள்’ என்று பொதுமைப்படுத்திட முடியாது.

{நான் எழுதிய திராவிட இயக்க வரலாறு முதல் பாகத்தில் நடராசன் – தாலமுத்து என்றொரு அத்தியாயம் இடம்பெற்றுள்ளது. மொழிப்போர்: இந்தித்திணிப்புக்கு எதிராகத் தமிழகம் திரண்ட வரலாறு என்ற புத்தகத்திலும் நடராசனின் தியாகத்தை முதன்மைப்படுத்தி எழுதியிருக்கிறேன் என்பது தகவலுக்காக.}